• Call Us : 90030 35559 , 98424 50963
புலியாகுமா அல்லது பலியாகுமா அரசு கேபிள்

அரசு கேபிளுக்கு கொடுக்கப்பட்டுள்ள டிஜிட்டல் லைசென்ஸும் அதன் தொடர்ச்சியாக வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளும் அரசு கேபிள் நிர்வாகத்தை தலை சுற்றவைத்து கடைசியில் "சீ சீ இந்தப் பழம் புளிக்கும்" என்னும் நிலைக்கும் தள்ளப்படலாம். அரசு கேபிள் நிர்வாகத்தை "அம்மா இருக்கும் போது" "அம்மா இல்லாத போது" என இரு பிரிவாக பார்க்க வேண்டிய கால கட்டாயம் இப்போது. அம்மாவின் ஆட்சியின் போது கோரிக்கை மேல் கோரிக்கை வைத்தும் கிடைக்காத டிஜிட்டல் உரிமம் இப்போது அவர் மறைந்த பின்பு அவரின் பிம்பத்தை வைத்து நடக்கும் ஆட்சியில் கிடைத்திருக்கிறது. அம்மா ஆட்சி பீடத்தில் இருக்கும் போது அரசு கேபிளை "ஓவர்லுக்" செய்து யார் புலிக்கு சங்கிலியை கட்டுவது (டிஜிட்டலுக்கு ஆப்பரேட்டர்களை மாற்றுவது) என்னும் தயக்கம் டிஜிட்டல் உரிமம் பெற்றவர்கள் மட்டுமின்றி மத்திய அரசுக்கே கூட இருந்ததாக தோன்றுகிறது. இன்று அம்மையாரின் மறைவுக்குப் பின்னர் புலி பூனையாக மாறி சங்கிலி மணியாக மாறி பூனைக்கு மணியை கட்டும் வேலையை மத்திய ஆளும்வர்க்கம் கனகச்சிதமாக செய்துவருவதாக தோன்றுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள 25000 க்கும் மேற்பட்ட ஆப்பரேட்டர்களில் இன்னமும் பெரும்பான்மையான ஆப்பரேட்டர்களுக்கு தனது அனலாக் சிக்னலையே ஒழுங்காக தர இயலாத நொண்டிக் குதிரையாகத்தான் அரசு கேபிளின் வேகம் இருக்கிறது. தனது நேரடி கட்டுப்பாட்டிலுள்ள 5 கண்ட்ரோல் ரூம் தவிர்த்து ஏனைய பகுதிகளில் சிக்னலை கொண்டு செல்ல இடைத்தரகர்களையே நம்பி இருக்கும் அரசு கேபிள் எவ்வாறு டிஜிட்டலை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்கும்? இப்போது அரசு கேபிளின் 60 முதல் 80 சதவிகித சிக்னலை ஆப்பரேட்டர்களுக்கு கொண்டு சேர்ப்பது டிசிஓ க்களே. இவர்களிடம் அரசு டிஜிட்டலையும் சந்தாதாரர்களின் செட் டாப் பாக்ஸ்களையும் ஒப்படைத்துவிட்டால் இப்போது அனலாக்கில் பறக்கும் அவர்களின் கொடி உயரே உயரே பட்டொளி வீசிப் பறக்க ஆரம்பிக்கும். இது இப்போது மணல் குவாரியை ஏலம் எடுத்து அரசுக்கு அரையணாவை கொடுத்துட்டு லட்சங்களை ஆட்டையப் போடும் ஒப்பந்தக்காரர்களைப் போலவே ஆகி அவர்களே அரசு கேபிளை நஷ்டத்தில் தள்ளி மூடுவிழா நடத்தியும் விடுவார்கள். பின்னர் அவர்களின் ராஜ்யம் தான். அரசு கேபிள் டிஜிட்டலுக்கு முன் இருந்தது, டிஜிட்டலுக்குப் பின் மறைந்தது என்றாகிப் போலாம். ஆப்பரேட்டர்களின் நலன் காக்கப்பட அரசே சில விதிமுறைகளை கீழ்க்கண்டவாறு உருவாக்கினால் அரசின் நோக்கமும் நிறைவேறும். 1.அரசு கேபிள் நிர்வாகத்தை மேம்படுத்தி அரசியல் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்வது. 2.அரசின் நேரடி கண்ட்ரோல் ரூம் உள்ள பகுதிகளை சுற்றி அரசே தன் பொருப்பில் சிக்னலை வழங்க வேண்டும். 3.தனது கண்ட்ரோல் ரூம் இல்லாத பகுதிகளில் இப்போது டிஜிட்டல் உரிமம் பெற்றுள்ளவர்களை அழைத்து தனது உபகண்ட்ரோல் ரூம்களாக நடத்த அனுமதியளித்து அவர்களின் சிக்னலை அரசின் சிக்னலாகவே பாவித்து வெளியிடவேண்டும். 4.லாஸ்ட் மைல் ஆப்பரேட்டர்களுக்கு தற்போது அரசு கேபிள் இணையப்பக்கத்திலேயே லாக்ஆன் செய்து அவரவர் வாடிக்கையாளர்களின் செட்டாப் பாக்ஸ்களை கையாளும் உரிமை வழங்கப்பட வேண்டும். 5.செட் டாப் பாக்ஸுகளை தனது உபகண்ட்ரோல் ரூம் அமைப்பாளர்களுக்கு அரசே குறைந்த விலையிலேயோ அல்லது இலவசமாகவோ வழங்கவேண்டும். 6.ஒவ்வொரு செட்டாப் பாக்ஸ் வழியாக வரும் வருமானத்தை ஆப்பரேட்டர்கள், உபகண்ட்ரோல் ரூம் அமைப்பாளர்கள் மற்றும் அரசு கேபிள் ஆகியவை விகித்தாச்சாரத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். 7.இங்கே செட் டாப் பாக்ஸ் வருமானம் என்பது வெறும் சானல்களுக்கான சந்தா மட்டுமல்ல, கேரேஜ் கட்டணம், தனியார் சானல்களுக்கான பேன்சி எண் கட்டணம், உள்ளூர் சானல்களின் கட்டணம், இணையக் கட்டணங்கள் என பலவழி வருமானங்களும் அடங்கும். 8.அரசின் நேரடி கண்ட்ரோல் ரூமாகட்டும் அல்லது பிற எம்எஸ்ஓ க்களின் பொறுப்பிலிருக்கும் உபகண்ட்ரோல் ரூமாகட்டும் அவர்களது சிக்னலை லாஸ்ட் மைல் ஆப்பரேட்டரின் ஒளிபரப்பு பகுதிவரை கொண்டு சென்று தேவையான சிக்னலையும் தரவேண்டும். 9.இணையப்பக்கத்தில் லாகின் செய்து தனது வாடிக்கையாளர்களின் செட்டாப் பாக்ஸுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஆப்பரேட்டர்கள் அரசு கேபிள் நிர்வாகத்திற்கு உரிய கட்டணத்தை வேலை செய்யும் பாக்ஸுகளுக்கு கட்டியாக வேண்டும். 10.செட்டாப் பாக்ஸுகளுக்கான சர்வீஸ் சென்டர்களையும் தாலூகா தோறும் அரசு கேபிள் நிர்வாகமே அமைத்திட வேண்டும். மேற்கூறிய அனைத்துமே நடக்க சாத்தியக்கூறுகள் கொண்ட காலத்தின் கட்டாயம். இதை அரசு கேபிள் கையிலெடுத்து ஆக்கபூர்வமாக களமிறங்குமானால் - அரசு கேபிளும், இருக்கும் - இயங்கும். தனியார் எம் எஸ் ஓ க்களும் கட்டுப்படுத்தப்பட்டு வாழ்விக்கப்படவும் செய்யலாம். டிடிஹெச் வழியாக பறிமுதலாகும் வருமானத்தை நமதாக்கலாம். ஆப்பரேட்டர்களும் சுபிட்சமடையலாம். நடக்குமென நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை. - கோவை ரவீந்திரன்