• Call Us : 90030 35559 , 98424 50963
Digitech Onsite 2018 - டில்லி பயணம்

டிஜிடெக் என்ற பெயரில் கருத்தரங்கம் முன்னரே நடத்தப்பட்டுள்ளது. இனியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அது நடைபெறும். அதே போல தொழில் ரீதியான சுற்றுலாக்களை DIGITECH ONSITE என்ற பெயரில் நடத்த முடிவு செய்தோம். அதன் முதல் முயற்சியாக புது டில்லியில் நடைபெறும் CONVERGENCE கண்காட்சிக்கு தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்களை அழைத்து செல்லலாம் என முடிவு செய்தோம். சுமார் 2,200 கிலோமீட்டர் பயணம் செய்ய போகும் நாம் கண்காட்சி மட்டும் காண்பதை விட அங்கிருக்கும் தொழில் சார்ந்த இடங்களையும் சுற்றுலா தளங்களையும் பார்வையிடலாம் என நினைத்தோம். அதற்காக ஐந்து நாட்கள் சுற்றுலாவாக இதை வடிவைமைத்து செயல்பட முடிவு செய்தோம். இதற்கென செயல்பட்டு வரும் தமிழகத்தின் முன்னணி சுற்றுலா ஆப்ரேட்டர்களை(Tour Operators) அணுகி அவர்களின் ஆலோசனை பெற்று அவர்களுடன் இணைந்து இதனை முன்னெடுக்கிறோம்.

இந்த முயற்சியின் வெற்றியும் வளர்ச்சியும் உங்கள் கைகளில் தான் உள்ளது. இது உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் இதற்கான ஒத்துழைப்பை கொடுங்கள். இது உங்களுக்கான தொழில் மேம்பாட்டினை முன்னிருந்து எடுக்கப்படும் முயற்சி.. ஐந்து நாட்கள் என்னவெல்லாம் செய்யபோகிறோம். இந்த சுற்றுலா எப்படி இருக்க போகிறது. என்பதை பற்றிய விரிவான கட்டுரை இது.... பார்க்கலாம்...!!

நமது இந்த சுற்றுலா 2018 மார்ச் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. தமிழகத்தின் இரண்டு இடங்களில் இருந்து இந்த பயணம் தொடங்கும். சென்னையில் இருந்து தொடங்கும் பயணம் சென்னையில் நிறைவு பெரும். கோவையில் இருந்து தொடங்கும் பயணம் அதே போல் கோவை நிறைவுபெறும். தங்கும் இடம், பயண திட்டம் அனைத்தும் ஒரே போல இருக்கும்.

முதல் நாள் மார்ச் 6:

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து புறப்பாடு செய்யும் பயணிகள் அனைவரும் காலை உணவை முடித்து விட்டு சென்னை விமான நிலையத்தில் காலை 8.30 மணிக்கு  கூட வேண்டும். பொதுவாக விமான நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக விமான நிலையத்தில் செக் இன் செய்திட வேண்டும். அதன் அடிப்படையில் காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் விமான நிலையத்தில் கூட வேண்டும். பின்னர், அனைத்து விமான நிலைய செயல்பாடுகளையும்(ENTRY FORMALITIES) முடித்து விமானத்தை அடைகிறோம். 10.30 மணியளவில் சென்னையில் விமானம் புறப்பாடு செய்யும். வானில் சுமார் 3 மணி நேரம் பயணம் செய்த நமது குழு, மதியம் 1.30 மணியளவில் டில்லி  இந்திரா காந்தி விமான நிலையத்தை சென்று சேரும். அதே போல கோவையில் இருந்து புறப்பாடு செய்யும் நமது குழுவினரும் அதே நேரத்தில் டில்லி விமான நிலையத்தை சேருவார்கள்.

அங்கே நம்மை வரவேற்க குளிரூட்டப்பட்ட பேருந்து தயாராக இருக்கும். சுமார் 30 நபர்கள் பயணம் செய்ய கூடிய A/C பேருந்தில் நமது அடுத்த பயணம் தொடங்கும். இரண்டு குழுக்களுக்கு இரண்டு பேருந்துகள் தயாராக இருக்கும். 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரோல் பாக் என்ற பகுதியில் அமைத்திருக்கும் ஹோட்டல் மெட்ரோ வியூ என்ற மூன்று நட்சத்திர விடுதிக்கு சென்று சேர்வோம். விமான பயணம் மேற்கொண்ட நாம் சற்று நம்மை ஆசுவாசப்படுத்தி கொண்டு அங்கே நமது மதிய உணவை முடிக்கிறோம். சைவம் மட்டும் சாப்பிடும் நண்பர்களுக்கு உயர் தர சைவ உணவும், அசைவ பிரியர்களுக்கு உயர் தர அசைவ உணவும் தனி தனியாக இருக்கும்...

மதிய உணவை முடித்த பின்னர் டில்லியின் பிரதான சுற்றுலா தளங்களை பார்வையிட செல்வோம். அங்குள்ள செங்கோட்டை, குதுப் மினார், இந்தியா கேட், கனாட் மாளிகை போன்ற இடங்களை பார்வையிடலாம். மேலும், சாந்தினி சவுக் என்ற சந்தைக்கு செல்லும் வாய்ப்பும் உள்ளது. அங்கு தங்களுக்கு விருப்பமான பொருட்களை மலிவு விலையில் பெற்று கொள்ள முடியும். அனைத்து இடங்களையும் சுற்றி பார்த்து அழகாய் படங்கள் எடுத்து கொண்டு, போதும் போதும் என்ற அளவில் SELFIE-களும் எடுத்து கொண்டு மீண்டும் ஹோட்டலுக்கு செல்கிறோம். அருமையான ஒரு குளியலை முடித்து விட்டு நீங்கள் இரவு உணவில் பங்கு பெறலாம். அளவான மற்றும் தரமான இரவு உணவை முடித்து அந்த மூன்று நட்சத்திர ஹோட்டலில் அன்றைய இரவு பொழுதை கழிக்கிறோம்.

 

 

 

இரண்டாம் நாள், மார்ச் 7:

காலை 8.30 மணிக்கு நமது காலை உணவை முடித்து நமக்கான பேருந்தில் கண்காட்சி அரங்கிற்கு செல்கிறோம். நாம் தாங்கும் இடத்தில இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிரகதி மைதான் என்ற இடத்தில் இந்த மாபெரும் கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியின் தொடக்க விழாவில் பங்குபெறும் வகையில் காலை 9.30 மணியளவில் கண்காட்சி அரங்கை சென்றடைகிறோம். அன்றைய நாள் முழுவதும் கண்காட்சி அரங்கில் புதிய தொழில்நுட்பங்களை பார்வையிடுகிறோம். கண்காட்சிக்குள் நுழைவதாற்கான ஆன்லைன் பதிவினை நாம் முன்னரே செய்து. நமக்கான அடையாள அட்டை பெற்று கண்காட்சி அரங்கிற்குள் நுழைவோம். சர்வதேச அளவில் கேபிள் டிவி ஒளிபரப்பு மற்றும் இணையதள தொழில் எப்படி எல்லாம் செயல்படுகிறது, புதிய பொருட்கள் என அனைத்தையும் பார்த்தும், மலிவு விலையில் வாங்கியும் அன்றைய நாளை பயனுள்ளதாக களிக்கலாம். மேலும், டில்லியில் உள்ள நமது துறை சார்ந்த வல்லுநர்கள் சிலர் நமது குழுவுடன் கலந்தாய்வு செய்ய தங்களது நேரத்தை ஒதுக்கியுள்ளனர். அன்று மதியம் கண்காட்சியில் அமைந்திருக்கும் SATTELITE @ INTERNET INDIA என்ற மாத இதழின் அரங்கில் அந்த ஆங்கில கேபிள் டிவி மாத இதழின் தலைமை ஆசிரியர் திரு. விஜய் மன்சுகனி அவர்களுடன் தொழில் பற்றி கலந்தாய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்றைய நாள் முழுவதும் கண்காட்சி அரங்கில் உள்ள அத்தனை  சிறப்பு அம்சங்களையும் பறவையிட உள்ளோம். சுமார் 10,000 சதுர அடியில் மிக பெரிய அளவில் அமைந்துள்ள அந்த அரங்குகள் அனைத்தையும் பொடி நடையாக நடந்து பார்வையிடும் நாம் மாலை கண்காட்சி முடித்து நமது ஹோட்டலுக்கு திரும்ப வந்து இரவு உணவை முடித்து அங்கே தங்குவோம்.

மூன்றாம் நாள் மார்ச் 08:

CONVERGENCE 2018 மிக பெரிய கண்காட்சி என்பதால் ஒரே நாளில் முழுமையாக பார்வையிட முடியாது. அதனால், கண்காட்சியின் இரண்டாம் நாளான மார்ச் 8 ஆம் தேதியும் கண்காட்சிக்கு செல்கிறோம். காலை உணவை தங்கி இருக்கும் ஹோட்டலில் முடித்து விட்டு, அதே போல 10 மணியளவில் கண்காட்சி அரங்கிற்கு செல்கிறோம். மதியம் வரை கண்காட்சியில் நேரம் செலவிடும் நமது குழு மதியத்திற்கு மேல் டில்லியின் மலிவு விலை எலெக்ட்ரோனிக் பொருட்கள் விற்பனை செய்யப்படும் சந்தையான ELECTRONIC STREET மற்றும் லஜ்பத் ராய் மார்க்கெட் செல்கிறோம். அங்கு கேபிள் டிவி பொருட்கள் மொத்த விலையில் கிடைக்கும். அங்கு தரமான ஆடைகள், வீட்டு உபயோக பொருட்கள் கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள் பெற்று கொள்ளலாம். டில்லியின் சாலைகள், கலாச்சாரம், சிற்றுண்டிகள் அனைத்தையும் பார்த்து ரசித்த நமது பயண குழு, ஹோட்டலுக்கு சென்று குளித்து இரவு உணவை முடித்து அங்கே தங்குகிறோம்.

நான்காம் நாள் மார்ச் 9 ஆம் தேதி:

ஹோட்டல் மெட்ரோ வியூ எனும் நாம் தங்கியிருக்கும் ஹோட்டலில் காலை உணவை முடித்து விட்டு, 8.30 மணியளவில் நாம் தங்கி இருக்கும் ஹோட்டலில் இருந்து நமது பொருட்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு, ஹோட்டல் செக் அவுட் செய்து விட்டு A/C BUS-ல் புறப்பாடு செய்கிறோம். நாம் தங்கி இருக்கும் ஹோட்டலில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் புராரி என்ற பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் மிக முக்கியமான கேபிள் டிவி பொருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவனமான SPEC TECHNOLOGY CORPORATION என்ற உற்பத்திக்கு ஆலைக்கு செல்கிறோம். கேபிள் டிவி பொருட்கள் தயார் செய்திடும் முறை பற்றி அங்கு நமக்கு நேரில் காண்பித்து விவரிக்கப்படும். அதன் செயல்பாடுகளையும் தொழில்நுட்பங்களையும் நாம் அறிந்து கொள்ள பேருதவியாக இருக்கும். சுமார் ஒரு மணி நேரம் அங்கு நாம் செலவு செய்கிறோம். அங்கே அவர்களது நிறுவனத்தின் FACTORY OUTLET அமைத்திருக்கும். விருப்பம் உள்ளவர்கள் பொருட்களை பெற்று கொள்ளலாம். அங்கிருந்து மீண்டும் புறப்பாடு செய்யும் நாம், சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ஹரியானாவின் பஹாதுர்கா எனும் பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் முன்னணி கேபிள் டிவி செட் டாப் பாக்ஸ் தயாரிக்கும் நிறுவனமான WILLETT STB TECHNOLOGIES PRIVATE LIMITED செல்கிறோம். டிஜிட்டல் அமலாக்கத்தில் கடை கோடி ஆபரேட்டர்கள் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று செட் டாப் பாக்ஸ் தொழில்நுட்பம். அந்த கேபிள் டிவி STBs உற்பத்தி செய்யும் முறை அதில் இருக்கும் பாகங்கள், மேலும் செயல் முறை விளக்கம் அனைத்தும் விளக்கப்படும். பின்னர், அங்கேயே இருக்கும் LCD, LED, SMAR TV தயாரிக்கும் நிறுவனத்தையும் பார்வையிட உள்ளோம். மதியம் வரை பயனுள்ள வகையில் நேரத்தை செலவிடும் நாம், மத்திய உணவை அங்கே முடிக்கிறோம். மதியம் மூன்று மணியளவில் அங்கிருந்து புறப்படும் நாம் சுமார் 237 கிலோமீட்டர் அதாவது 5 மணி நேர பயணத்தில் உத்திரபிரதேச மாநிலம் ஆக்ரா சென்றடைவோம், அது வெள்ளி கிழமை என்பதால் தாஜ் மஹால் பார்வையிட அனுமதி இல்லை. அதனால், அங்கு இருக்கும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் ஒன்றான ஹோட்டல் லைட் ஹவுஸ் என்ற விடுதியில் தங்குகிறோம். ஆக்ரா வீதிகளில் உலாவ விரும்பும் அன்பர்கள், புதிய உணவுகள் சுவைக்க விரும்பும் பயணிகள் என பலருக்கும் அங்கு சுற்றி பார்க்க  நேரம் இருக்கலாம். அனைத்து வசதிகளையும் கொண்ட நாம் தங்கும் ஹோட்டலில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். அன்று இரவு ஆக்ரா LIGHT HOUSE ஹோட்டலில்...

ஐந்தாம் நாள் மார்ச் 10:

நமது பயணத்தின் ஐந்தாம் நாள் காலை 6 மணியளவில் நாம் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து புறப்பாடு செய்து நேரடியாக உலக அதிசயத்தின் ஒன்றான தாஜ் மஹால் பார்வையிடுகிறோம்.... தொழில் மீது காதல் கொண்டுள்ள நாம் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு அழகிய சமாதி. பின்னர், அங்குள்ள வரலாற்று மற்றும் புராதன சின்னங்களை பார்க்கிறோம். காலை உணவை முடித்து விட்டு மிக சரியாக எந்த தாமதமும் இல்லாமல் 11 மணியளவில் ஆக்ராவில் இருந்து டில்லிக்கு புறப்பாடு செய்கிறோம். சுமார் 5 மணி நேரம் குளிரூட்டப்பட்ட பேருந்தில் டில்லி விமான நிலையத்தை 4 மணியளவில் சென்றடைகிறோம். மாலை 4.30 மணியளவில் விமான நிலையத்தில் செக் இன் செய்து  5.30 சென்னை விமானத்தில் ஒரு குழு சென்னை வந்து சேரும். அதே போல மாலை விமானத்தில் மற்றொரு குழு கோவை வந்து சேரும். அங்கிருந்து அவரவர் ஊர்களுக்கு செல்ல வேண்டும்.

இவ்வாறு இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

 

இந்த பயணத்தில் மிக முக்கியமானது:

  • இந்த பயணம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், சேட்டிலைட் மற்றும் உள்ளூர் சேனல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள், இணையதள சேவை வழங்குவோர் மற்றும் ஒளிபரப்பு ஊடக துறை சார்ந்தவர்கள் மட்டுமே இந்த DIGITECH ONSITE 2018- NEW DELHI சுற்றுலாவில் இடம் பெற முடியும்.
  • குடும்பத்துடன் கலந்து கொள்ளும் திட்டம் இந்த பயணத்தில் இல்லை.
  • பயணத்தின் போது அசல் அடையாள அட்டை கையில் வைத்திருக்க வேண்டும்.(ORIGINAL ID PROOF)
  • பயண அட்டவணையில் குறிப்பிடப்பட்ட நேரத்தில் இருந்து தவறும் பயணிகளுக்கு சுற்றுலா நிர்வாகம் பொறுப்பல்ல. அதனால், பயண ஆலோசகர்(GUIDE) கூறும் நேரத்தில் சரியாக பயணிக்க வேண்டும்.
  • எந்த இடத்திலும் மது ஏற்பாட்டினை நிர்வாகம் செய்து தராது, மது அருந்த விரும்பும் பயணிகள் அவர்கள் சொந்த பொறுப்பில் மது அருந்தி கொள்ளலாம். அதனால், சில இடங்களில் அனுமதி மறுக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பயணத்தின் போதோ ,தங்கும் இடத்திலோ தவற விடும் பொருட்களுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.
  • விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் நகைகளை தவிர்ப்பது சிறப்பு.
  • அதிக அளவிலான ரொக்கத்தை கையில் வைத்திருப்பதை விட வங்கி கணக்கில் வைத்து ஏ.டி.எம் கார்டு பயன்படுத்தி கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
  • உடல் நல குறைபாடுகள் ஏற்பட்டால் இந்த பயணத்தில் இருந்து விளக்க அழைக்கப்படுவார்கள்.
  • எந்த காரணத்திற்காகவும் பயண திட்டத்தில் இருந்து மாறுபட கூடாது, தவறும் பட்சத்தில் அந்த பயணியின் பயணத்தை நிர்வாகம் பொறுப்பேற்க முடியாது.
  • இந்த பயணத்திற்காக செலுத்தப்படும் கட்டணம் எந்த காரணத்திற்கும் திரும்ப பெறத்தக்கதல்ல.(NON REFUNDABLE)
  • தவற விடும் பேருந்து, விமானம் போன்ற விஷயங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
  • விமானத்தில் குறிப்பிடப்பட்ட அளவிலேயே பொருட்கள் எடுத்து வர முடியும். டில்லியில் PURCHASE செய்த பொருட்கள் எடை அதிகமாக இருப்பின் அதனை முன்னரே கூடுதல் கட்டணம் செலுத்தி கார்கோ மூலம் கொண்டு வர வேண்டும்.
  • பயணத்தின் போது செய்யப்படும் அனைத்து விஷயங்களையும் நிர்வாகிகளின் ஆலோசனையின் படி செய்திட வேண்டும். மேலும், எந்த நேரமும் தொலைபேசியில் தொடர்பில் இருந்திட வேண்டும்.